அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் தமிழக அரசு விரிவுபடுத்திய ‘வெற்றி பயணம்’ திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்கக் கோரி, ஈரோட்டை சேர்ந்த தனியார் பஸ் உரிமையாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
முன்னதாக தி.மு.க. ஆட்சியில் ‘விடியல் பயணம்’ என்ற பெயரில் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்டோபர் 2ஆம் தேதி முதல்வர் விஜய் இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்ததாகவும், இதன் மூலம் மாநிலம் முழுவதும் இயக்கப்படும் 12,600க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர் கலாமணி கூறியதாவது: திட்டம் விரிவாக்கப்பட்டதால் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு, தொழிலை கைவிட வேண்டிய சூழல் உருவாகும். மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு சுமார் 6,000 கோடி ரூபாய் கட்டணத்தை அரசே ஏற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் பேருந்துகளிலும் இழப்பீடு வழங்கி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற தனியார் பஸ் உரிமையாளர்கள் கூட்டமைப்பின் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை என்றும், சட்டசபையில் அறிவித்திருந்தாலும் திட்டம் தொடர்பாக எந்த அரசாணையும் வெளியிடப்படவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை அரசியல் சட்டத்திற்கு முரணானது என அறிவிக்க வேண்டும் என்றும், வழக்கு முடியும் வரை இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரியுள்ளார். மனு இன்று தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.





