சென்னை: கோவில் வளாகங்களில் வீடியோ அல்லது புகைப்பட பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டு, அந்த காட்சிகள் பின்னர் ஊடகங்களில் வெளியானாலோ அல்லது வெளியே பரவினாலோ, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீது உடனடியாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் வினய் எச்சரித்துள்ளார்.

கோவில் செயல் அலுவலர்களின் வாட்ஸ்அப் குழுவில் “இறுதி எச்சரிக்கை” என்ற பெயரில் பகிரப்பட்ட தகவலில், கோவில் வளாகத்திற்குள் ஊடகப் பதிவு, வீடியோ பதிவு அல்லது படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டு அது வெளியே பரவினால், சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீப நாட்களில் நடிகர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இடம்பெறும் வீடியோக்கள் கோவில் வளாகத்திற்குள் இருந்து வெளியாகி வருவது, முறையான அனுமதியின்றி பதிவு செய்ய அனுமதிக்கப்படுவதை காட்டுகிறது என்றும், துறையின் முன் அனுமதி இல்லாமல் எந்தவித பதிவு/படப்பிடிப்பையும் அனுமதிக்கக் கூடாது என்றும் அந்த அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்வினையாக சில கோவில் செயல் அலுவலர்கள் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். நடிகர், நடிகையர் மட்டுமின்றி அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் வரும்போது ஊடகத்துறையினர் மட்டுமல்ல, கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் வந்து புகைப்படம், வீடியோ எடுப்பதாக அவர்கள் கூறினர்.

தொழில்நுட்பம் பரவலாக உள்ள சூழலில் அனைவரையும் தடுக்குவது கடினம்; தடுத்தால் “எதுவும் எடுக்கவில்லை” என்று வாக்குவாதம் ஏற்பட்டு தினசரி பிரச்னையாக மாறும் அபாயம் உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர். தெளிவான நடைமுறை இல்லாமல் வீடியோ வெளியானால் பணியாளர்மீது நடவடிக்கை என்றால் பலர்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை வரும் எனக் கூறிய அவர்கள், உத்தரவு பிறப்பிக்கும் முன் அனைவருடனும் கலந்தாலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.