இந்தியா மற்றும் கனடா இடையிலான விரிவான பொருளாதார கூட்டாண்மை வர்த்தக ஒப்பந்தம் (CEPA) தொடர்பான ஐந்தாவது சுற்று பேச்சுவார்த்தை, கனடாவின் ஒட்டாவாவில் அக். 5 அன்று தொடங்குகிறது என்று வர்த்தகத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரு நாடுகளின் மூத்த அதிகாரிகள் பங்கேற்கும் இந்த பேச்சு ஐந்து நாட்கள் நடைபெற்று அக். 9 அன்று நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. நான்காவது சுற்று பேச்சு செப். 18 அன்று புதுடில்லியில் முடிந்தது.

இந்தாண்டு இறுதிக்குள் பேச்சுவார்த்தைகளை முடிக்க இரு தரப்பும் இலக்கு நிர்ணயித்துள்ளதால், தற்போதைய கட்டத்தில் பேச்சுகள் வேகப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

ஒப்பந்தம் நிறைவேறினால், இரு நாடுகளுக்கிடையே வர்த்தகம் செய்யப்படும் பல பொருட்களுக்கான சுங்க வரிகள் குறைக்கப்படவோ அல்லது நீக்கப்படவோ வாய்ப்பு உள்ளது. மேலும் திறன் வாய்ந்த பணியாளர்கள் இரு நாடுகளிலும் பணியாற்றுவதற்கான விதிகளை எளிதாக்குவது மற்றும் முதலீடுகளை ஊக்குவிப்பது போன்ற அம்சங்களும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்துக்கான பேச்சை இரு நாடுகளும் 2015ல் தொடங்கின. இடைவேளைக்குப் பிறகு, 2025 நவம்பரில் மீண்டும் முறையான பேச்சை தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, கனடாவின் வர்த்தக அமைச்சர் மனிந்தர் சித்து, 300 பேர் கொண்ட வர்த்தகக் குழுவுடன் இம்மாத இறுதியில் டில்லி வர உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.