மத்திய ஆசிய நாடுகளான தஜிகிஸ்தான் மற்றும் துர்க்மெனிஸ்தானுக்கு, உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை அமைப்பை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளதாக ராணுவ செயலர் உறுதி செய்துள்ளார்.
உலக நாடுகளில் ராணுவ உபகரணங்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவின் பாதுகாப்புத் தயாரிப்புகளுக்கு வெளிநாடுகளில் வரவேற்பு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பீரங்கிகள், ஏவுகணைகள் உள்ளிட்ட பல்வேறு ராணுவ தளவாடங்கள் தற்போது 80க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
2025 நிதியாண்டில் இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி ரூ.38,000 கோடியை கடந்துள்ளது. இது முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் 62 சதவீத உயர்வாகும். 2030க்குள் இந்த ஏற்றுமதி மதிப்பை ரூ.50,000 கோடியாக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்தியாவின் ஏற்றுமதி பட்டியலில் ஆகாஷ் மற்றும் பிரம்மோஸ் ஏவுகணைகள் முக்கிய இடம் பெற்றுள்ளன. ஆகாஷ் ஏவுகணையின் முதல் வெளிநாட்டு வாடிக்கையாளராக ஆர்மீனியா இருந்தது.
டி.ஆர்.டி.ஓ. (ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்) உருவாக்கிய ஆகாஷ், நடுத்தர தொலைவு வான்வழி பாதுகாப்பு ஏவுகணை அமைப்பாகும். பல்வேறு சென்சார்களில் இருந்து கிடைக்கும் தகவல்களை ஒருங்கிணைத்து வானில் வரும் அச்சுறுத்தல்களை கண்டறிந்து தாக்கும் திறன் கொண்டது. 25 கி.மீ. வரை போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் போன்ற இலக்குகளை கண்டறிந்து அழிக்கும் திறன் இதில் உள்ளது.





