ரஷ்யாவின் இர்குட்ஸ்கில் கடுமையான நிமோனியாவால் பெண் ஆராய்ச்சியாளர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் உள்ளிட்ட 197 பேர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் நோய் பரவல் குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.

இர்குட்ஸ்க் நகரில் செயல்படும் பிளேக் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிய அந்தப் பெண், செப். 29 அன்று கடுமையான நிமோனியா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அக். 2 அன்று அவர் உயிரிழந்தார்.

மாதிரிகள் சேகரிக்கும் பணியில் இருந்தபோது, ‘யெர்சினியா பெஸ்டிஸ்’ (பிளேக் நோயை ஏற்படுத்தும் பாக்டீரியா) உள்ள ஆய்வுக்குழாய் தவறி விழுந்து உடைந்ததாகவும், அதிலிருந்து தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த ஆய்வக சம்பவம் குறித்து ரஷ்ய அரசு அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.

ரஷ்யாவின் நுகர்வோர் உரிமைகள் மற்றும் மனித நலக் கண்காணிப்பு அமைப்பான ரோஸ்போட்ரெப்நாட்ஸோர், அந்தப் பெண்ணுக்கு காரணம் தெரியாத நிமோனியா ஏற்பட்டதாக தெரிவித்ததுடன், இதன் மூலம் நோய் பரவ வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளது.

தொற்று நோய் நிபுணர் மிக்கல் பவோரோவ், இத்தகைய ஆய்வகங்களில் பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்துவது வழக்கம் என்பதால் உடைந்த குழாய் மூலம் தொற்று பரவியது நம்ப முடியாதது என்றார். முன்னாள் ஏஜென்சி தலைவர் ஜென்னடி ஒனிஷ்சென்கோவும் இது பிளேக் தொற்றாக இருக்க வாய்ப்பில்லை என்றும், உறுதிப்படுத்தப்பட்டாலும் குளிர்காலம் காரணமாக பரவல் வாய்ப்பு குறைவாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.