இந்தியாவின் பாதுகாப்புக்கும், பிராந்திய ஒற்றுமைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்ட போதெல்லாம் ரஷ்யா இந்தியாவுக்கு துணை நின்றதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார். ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் அவர் இதை கூறினார்.
1950களிலிருந்து இந்தியா–ரஷ்யா உறவு வரலாற்று ரீதியாக வலுவாக இருந்து வந்ததாகவும், அந்த மரபு மறக்கப்படவில்லை என்றும் ஜெய்சங்கர் குறிப்பிட்டார். இந்தியாவின் அண்டை பகுதியில் இருந்த ராணுவ ஆட்சியை ஆதரிக்க முயன்ற காலங்களிலும் இருநாடுகளின் உறவு நல்ல நிலையில் தொடர்ந்ததாகவும் அவர் கூறினார்.
இன்றைக்கு இந்த உறவு மேலும் விரிவடைந்து பொருளாதார பரிமாணத்தையும் பெற்றுள்ளதாக அவர் விளக்கினார். பாதுகாப்பு, அணுசக்தி, விண்வெளி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புடன், வர்த்தகம், முதலீடு மற்றும் எரிசக்தி பரிமாற்றமும் கணிசமாக நடைபெறுவதாக தெரிவித்தார்.
உக்ரைன் தொடர்பான மோதலில் இந்தியாவின் நிலைப்பாடு தெளிவானது; இந்த மோதலுக்கு முடிவு காணப்பட வேண்டும் என்றும், பேச்சு மற்றும் ராஜதந்திரம் அவசியம் என்றும் ஜெய்சங்கர் கூறினார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இரு நாடுகளுடனும் இந்தியா உரையாடி வருவதாகவும், கருங்கடல் கப்பல் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளில் உதவ முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.





