சுவிட்சர்லாந்தில் இந்திய மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், நிபுணர்கள் மற்றும் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தார். இரு நாடுகளுக்கிடையே செய்யப்பட்ட புதிய புரிந்துணர்வுகள் இதற்கு வழிவகுக்கும் என்றார்.
இந்தியா வந்துள்ள சுவிஸ் அதிபர் கய் பார்மலின், புதுடில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி, இரு தலைவர்களும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.
முதலீட்டு வாய்ப்புகளை எளிமைப்படுத்தவும், இந்திய ஏற்றுமதி பொருட்கள் சுவிட்சர்லாந்து சந்தையை எளிதில் அணுகவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக மோடி கூறினார். விவசாயம், மருந்து, ஜவுளி, பொறியியல் பொருட்கள் போன்ற துறைகளில் இந்திய ஏற்றுமதி அதிகரிக்கும் என்றும், பயோடெக், உயிர் அறிவியல், வங்கி, காப்பீடு, உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் சுவிஸ் முதலீடு உயரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் சுகாதாரம், தூய எரிசக்தி, விண்வெளி துறைகளில் கூட்டு ஆராய்ச்சி திட்டங்கள் விரைவில் தொடங்கப்படும் என்றார். யோகா மற்றும் ஆயுர்வேதா குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கும் நிலையில், அந்த துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் ஆக்கப்பூர்வமாக விவாதித்ததாக தெரிவித்தார்.
இரு நாடுகளும் ஜனநாயக மாண்புகள், சட்டத்தின் ஆட்சி மற்றும் உரையாடல் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ளன என்றும், உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இணைந்து செயல்படுவோம் என்றும் மோடி கூறினார். உக்ரைன் மற்றும் மேற்கு ஆசிய விவகாரங்களில் அமைதியை நோக்கிய முயற்சிகளை இந்தியா தொடரும் என்றும், சர்வதேச சவால்களுக்கு தீர்வுகள் காணவும் உலக அமைப்புகளில் சீர்திருத்தங்களை முன்னெடுக்கவும் இரு தரப்பும் ஒப்புக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.





