புதுடில்லி: இந்தியாவில் பாலிமர் (பிளாஸ்டிக்) ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் முயற்சியில், இந்தியாவின் யூப்ளெக்ஸ் மற்றும் அமெரிக்காவின் ஸ்பெக்ட்ரா சிஸ்டம்ஸ் இணைந்து டெண்டரில் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்பிஐ, சோதனை அடிப்படையில் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் மதிப்பில் தலா 100 கோடி பாலிமர் நோட்டுகளை வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த முயற்சிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதித்துறை இணைமைச்சர் பங்கஜ் சவுத்ரி முன்பு லோக்சபாவில் தெரிவித்திருந்தார்.

தகவல் அறிந்த வட்டாரங்களின் படி, ஆர்பிஐக்கு சொந்தமான பாரதிய ரிசர்வ் வங்கி நோட் முத்ரன் நிறுவனம் (BRBNMPL), பாலிமர் நோட்டுகளுக்கான மூலப்பொருள் சப்ளையர்களை தேர்வு செய்ய டெண்டர் வெளியிட்டுள்ளது. டெண்டர் நிபந்தனைகளின்படி, 10 ரூபாய் நோட்டுகளுக்கு 34,000 ரீம்களும், 20 ரூபாய் நோட்டுகளுக்கு 34,000 ரீம்களும் என மொத்தம் 68,000 ரீம் பிளாஸ்டிக் தாள் தேவைப்படுகிறது.

இந்த நோட்டுகளுக்காக பி.ஓ.பி.பி. (BOPP) எனப்படும் சிறப்பு வகை பாலிப்ரொப்பிலீன் பிளாஸ்டிக் தாள் பயன்படுத்தப்பட உள்ளது. பெரிய அளவில் கொள்முதல் செய்வதற்கு முன், தொழில்நுட்ப தரம், பாதுகாப்பு அம்சங்கள், அச்சிடும் திறன் மற்றும் தொடர்ந்து வழங்கும் திறன் ஆகியவை சோதிக்கப்படும் என வட்டாரங்கள் தெரிவித்தன.

உலகின் சுமார் 60 நாடுகளில் பாலிமர் நோட்டுகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பயன்பாட்டில் உள்ளன. பிரிட்டன், கனடா, நியூசிலாந்து, சிங்கப்பூர், வியட்நாம், ருமேனியா உள்ளிட்ட நாடுகளில் இவ்வகை நோட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவிலும் பெரிய அளவில் அறிமுகப்படுத்துவதற்கு முன் நீடித்த பயன்பாடு, பாதுகாப்பு மற்றும் அச்சுத் தரம் போன்ற அம்சங்கள் பரிசோதிக்கப்பட உள்ளன.