‘ஒரு சனாதனியின் புரோட்டீன் காலை உணவு’ என்ற தலைப்பில் வெளியான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் இடம்பெறுபவர் தமல்; அவர் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலின்படி, தமல் 2009-ல் இந்தியா வந்தார். மேற்கு வங்கத்தின் மாயபூர் குருகுலத்தில் தங்கி சமஸ்கிருதம், வேத மந்திரங்கள் மற்றும் பூஜை சடங்குகளை கற்றுக் கொண்டதாகவும், 2021 முதல் ஹோமம் நடத்தி வருவதாகவும் கூறுகிறார். ஆன்மிகம் மற்றும் உடல் உறுதி தொடர்பான வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருவதாகவும், தன்னை ‘வெஜிடேரியன் பாடி பில்டர்; சனாதன தர்மத்தை பின்பற்றுபவன்’ எனவும் குறிப்பிடுகிறார்.

வைரலான வீடியோவில் அவர் காலை உணவுக்கான பொருட்களாக சோயா பால், தயிர், வெள்ளரி, தக்காளி, ஆப்பிள், பிரெட் ஆகியவற்றை காட்டுகிறார். மேலும் சோயா பீன்ஸை சிறு துண்டுகளாக வெட்டி நெய்யில் சமைத்து, சீரகம், மஞ்சள், பெருங்காயம், உப்பு, மிளகு சேர்க்கிறார்; இறுதியில் சில துளசி இலைகளையும் சேர்த்துக் கொள்கிறார்.

இவ்வாறு தயாரித்த உணவை அவர் இறைவனுக்கு படையலாக வைத்து, ‘படையல் வைத்தால் அது பிரசாதமாகி விடுகிறது’ என விளக்குகிறார். இந்தக் காட்சி மற்றும் அவரது கருத்துகள் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.