புதுடில்லி: தலைமைத் தேர்தல் கமிஷனர் (சிஇசி) ஞானேஷ் குமாரை பணியிடை நீக்கம் செய்யக் கோரிய மனுவில் எந்த இடைக்கால உத்தரவும் வழங்க முடியாது என சுப்ரீம் கோர்ட் திங்கள்கிழமை தெரிவித்தது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) தொடர்பாக, மற்ற தேர்தல் கமிஷனர்களிடம் ஆலோசிக்காமல் சிஇசி ஒருதலைப்பட்சமாக முடிவுகள் எடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே, இரு தேர்தல் கமிஷனர்கள் கேபினட் செயலருக்கு எழுதிய கடிதம் குறித்து, அது புகார் கடிதம் அல்ல; பணி மாற்றம் தொடர்பான கடிதம் என பின்னர் விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டது.
இந்த பின்னணியில், தேர்தல் கமிஷனர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோரின் ஒப்புதல் இல்லாமல் எடுக்கப்பட்ட முடிவுகளை எதிர்த்தும், சிஇசி-யை சஸ்பெண்ட் செய்யக் கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி ஜாய்மால்யா பாக்சி மற்றும் நீதிபதி வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இதை விசாரித்தது.
மனுதாரர் ராகேஷ் குமார் சிங் சார்பில் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் ஆஜராகி, வாக்குரிமை குறித்து குடிமக்கள் பாதுகாப்பற்றதாக உணர்வதால் இடைக்கால நடவடிக்கைகள் தேவை என வாதிட்டார். இதையடுத்து இந்திய தேர்தல் ஆணையம், சிஇசி ஞானேஷ் குமார், தேர்தல் கமிஷனர்கள் சந்து, ஜோஷி மற்றும் துணை தேர்தல் கமிஷனர் மணீஷ் கார்க் (ஐஏஎஸ்) ஆகியோருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால், இடைக்கால உத்தரவு வழங்க நீதிபதிகள் மறுத்தனர். மற்ற இரு தேர்தல் கமிஷனர்களின் ஏகமனதான ஒப்புதல் இன்றி ஒருதலைப்பட்சமாக முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பது உறுதியாக நிரூபிக்கப்பட்டால், இந்த நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்வோம் என அமர்வு தெரிவித்தது.





