சிங்கப்பூரில் ஆண்டுதோறும் பிறப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால் மக்கள் தொகை வளர்ச்சி சரிவை கட்டுப்படுத்த அரசு புதிய முயற்சியை தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு அங்கு 29,864 குழந்தைகள் மட்டுமே பிறந்ததாகவும், திருமணங்கள் தாமதமாகுவதுதான் பிறப்பு விகிதம் குறைய முக்கிய காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, சிங்கப்பூர் அரசு ‘பர்ஸ்ட் டேட்’ என்ற பெயரில் டேட்டிங் ஆப்பை அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக இந்த ஆப் அரசு அதிகாரிகளின் பயன்பாட்டுக்கு வழங்கப்படுகிறது.
திருமணமாகாத 21 முதல் 35 வயதுக்குள் உள்ள ஆண், பெண்கள் இந்த ஆப்பின் மூலம் துணையைத் தேர்வு செய்யலாம். மாதத்திற்கு ஒரு பொருத்தமான வரன் பரிந்துரைக்கப்படும்; இருவரும் முடிவெடுக்க 72 மணி நேர அவகாசம் வழங்கப்படும்.
இரு தரப்பும் ஒப்புக்கொண்டால் மட்டுமே தொடர்பு எண்கள் பகிரப்படும். சுயவிவரங்கள் சம்பந்தப்பட்ட நபருக்கு மட்டுமே தெரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஒரே துறையில் பணிபுரியும் சக ஊழியர்கள் ஜோடிகளாக இணைக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





