சென்னை: ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் துவரம் பருப்பு கொள்முதலில் கிலோக்கு ரூ.31 விலை குறைந்ததன் மூலம் கடந்த மூன்று மாதங்களில் ரூ.187.56 கோடி சேமிப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.30 மானிய விலையில் வழங்கப்படுகிறது. புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு “வெளிப்படையான டெண்டர் நடைமுறைகள்” மூலம் கிலோ ரூ.77.89 என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

இதனை முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் கிலோக்கு ரூ.109.15 செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் விலையுடன் ஒப்பிட்டு, தற்போது கிலோக்கு ரூ.31 மிச்சம் ஏற்பட்டுள்ளதாக அரசு தரப்பு விளக்குகிறது.

இந்தாண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரை 60,000 டன் துவரம் பருப்பை ரூ.467.34 கோடியில் கொள்முதல் செய்ததாகவும், 2025 ஜூலை–செப்டம்பர் காலத்தில் அதே அளவு மற்றும் தரம் கொண்ட பருப்புக்காக ரூ.654.9 கோடி செலவிடப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பருப்பு விலையில் பெரிய மாற்றம் இல்லாத நிலையிலும் இவ்வளவு சேமிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறிய அதிகாரிகள், தற்போதைய கொள்முதல் விலை தொடர்ந்தால் துவரம் பருப்பு கொள்முதலில் மட்டும் ஆண்டுக்கு சுமார் ரூ.750 கோடி வரை மக்கள் பணம் மிச்சமாகும் எனவும் தெரிவித்தனர்.