புதுடில்லி: கடந்த 25 ஆண்டுகளில் குஜராத் முதல்வராகவும், பின்னர் பிரதமராகவும் நரேந்திர மோடி ஆற்றிய சாதனைகளை மத்திய அமைச்சரவை பாராட்டியதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
அக்டோபர் 6 அன்று டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் போது அமைச்சர்கள் ஒருமனதாக அவரது பொதுச்சேவையை பாராட்டியதாகவும், அந்த 25 ஆண்டு மைல்கல்லை நினைவுகூர்ந்து அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் வைஷ்ணவ் கூறினார்.
மேலும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7% முதல் 8% வரை வளர்ந்து வரும் நிலையில் சரக்குப் போக்குவரத்துக்கான தேவை அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். இதை பூர்த்தி செய்ய நாடு முழுவதும் நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுவதுடன், ரயில் இணைப்புகள், புதிய நீர்வழிகள் மற்றும் துறைமுகங்கள் உருவாக்கப்படுகின்றன; புதிய விமான நிலையங்களும் கட்டப்படுகின்றன என்றார்.
எதிர்காலத் தேவைகளை முன்கூட்டியே கணித்து, அடுத்த 10 ஆண்டுகளில் எத்தனை புதிய ரயில் பாதைகள், நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் தேவைப்படும் என்பதுபோன்றவற்றை திட்டமிட வேண்டுமெனவும் வைஷ்ணவ் தெரிவித்தார்.
கடந்த 12 ஆண்டுகளில் பிரதமர் பல சீர்திருத்தங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு கடன் பெறுவது எளிதாகும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.





