தாராபுரத்தில் நடந்த முதல்வர் விஜயின் ரோடு ஷோவில், மாட்டு வண்டி ஓட்டிய அசோக் என்பவர் குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. த.வெ.க. வேட்பாளர் சத்யபாமாவுக்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கில் அவரது பெயர் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் சத்யபாமா, கடந்த 26ம் தேதி குண்டடம் அருகே பொட்டிக்காம்பாளையம், முண்டு வேலம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் அமைச்சர்களுடன் பிரசாரத்துக்கு சென்றதாக தகவல். அப்போது கிராமத்துக்குள் வர எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பிரசாரம் பாதியில் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சிலர் இருசக்கர வாகனங்களில் பின் தொடர்ந்து வேட்பாளருக்கு எதிராக கோஷமிட்டதாக புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் 17 வயது சிறுவன் உட்பட 8 பேர் மீது குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்ததாகவும், மேலும் சிலர் பெயர் எப்.ஐ.ஆரில் சேர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வழக்கில் பெயர் உள்ளதாக கூறப்படும் பொட்டிக்காம்பாளையத்தை சேர்ந்த அசோக், 8 நாட்களில் த.வெ.க.வில் இணைந்ததாகவும், த.வெ.க. துண்டு அணிந்து தாராபுரத்தில் நடந்த ரோடு ஷோவில் முதல்வரை மாட்டு வண்டியில் அழைத்துச் சென்றதாகவும் தகவல் வெளியாகி விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க. திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் செல்வகுமரன், போலீசால் தேடப்பட்டவர் எப்படி முதல்வரின் அருகில் பாதுகாப்புடன் இருந்தார் என கேள்வி எழுப்பினார். இதன் மூலம் வழக்கு பொய் வழக்கு என்பதை காட்டுகிறது என்றும், அசோக் உள்ளிட்ட பலரை மிரட்டி த.வெ.க.வில் சேர்த்ததாகவும், இதற்கான ஆடியோ ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.