புதுடில்லி: பாரம் 6 மாற்றம் தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளை இந்திய தேர்தல் கமிஷன் (ECI) மறுத்து விளக்கம் வெளியிட்டுள்ளது.

ராகுல் காந்தி வெளியிட்ட அறிக்கையில், தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பாரம் 6-ஐ சட்டவிரோதமாகவும் தன்னிச்சையாகவும் மாற்றியதாகவும், பாஜவுக்கு உதவ பதவியை தவறாக பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் பீஹாரில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் ‘சிறப்பு தீவிர திருத்தம்’ (SIR) தொடர்பான தேர்தல் கமிஷன் உத்தரவு ஒன்றையும் அவர் வெளியிட்டார்.

இதற்கு பதிலளித்த தேர்தல் கமிஷன், அந்த பதிவு தவறான புரிதலை ஏற்படுத்துவதாக தெரிவித்தது. பீஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக 2025 ஜூன் 24-ஆம் தேதி வெளியிடப்பட்ட உத்தரவு, கமிஷனின் ஒருமனதான ஒப்புதலுடன் பிறப்பிக்கப்பட்டதாக கூறியது.

மேலும், அந்த உத்தரவை 2026 மே 27-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உறுதி செய்ததாகவும், SIR நடைமுறைக்காக பாரம் 6-க்கு இணைக்கப்பட்ட உறுதியளிக்கும் படிவத்தையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்ததாகவும் தேர்தல் கமிஷன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.