மதுரை மாவட்டம் பேரையூர் அருகே கல் குவாரிக்கு தடை கோரிய மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, மதுக்கடைகளை பாதுகாப்பதை விட இயற்கை வளமிக்க மலைகளை பாதுகாப்பதே முக்கியம் என கருத்து தெரிவித்தது.
நம்மாழ்வார் இயற்கை பாதுகாப்பு சங்கத் தலைவர் பெத்தணன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், எஸ்.பாப்பிநாயக்கன்பட்டி மற்றும் பி.சங்கரலிங்காபுரம் அருகே “ஓணான் கரடு” அல்லது “பெருமாள் மலை” என அழைக்கப்படும் மலைக்குன்றில் முதுமக்கள் தாழி, வட்டெழுத்துக்கள் உள்ளிட்ட தொல்லியல் சின்னங்கள் உள்ளதாக கூறப்பட்டது.
அந்தப் பகுதியில் கல் குவாரி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தொல்லியல் சின்னங்களுக்கும் இயற்கை வளங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் குவாரிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரினார்.
இந்த வழக்கை நீதிபதிகள் பி.வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.
இதற்கு நீதிபதிகள், மதுக்கடைகளை பாதுகாப்பதில் காட்டும் அக்கறையை இத்தகைய வழக்குகளில் பதில் மனு தாக்கல் செய்வதில் காட்டுவதில்லை என கேள்வி எழுப்பி, இயற்கை வளங்களை சுரண்டினால் மீண்டும் கிடைக்குமா என்றும் குறிப்பிட்டனர். தமிழக கனிமவளத்துறை கமிஷனர், தொல்லியல் துறை இயக்குநர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் நவம்பர் 2-க்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.





