ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற பனாமா நாட்டைச் சேர்ந்த வர்த்தக கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா செவ்வாய்க்கிழமை கடும் கண்டனம் தெரிவித்தது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிக்கையில், அந்தக் கப்பலில் 19 பேர் கொண்ட பணியாளர் குழு இருந்ததாகவும், அவர்களில் 17 பேர் இந்தியர்கள் எனவும் தெரிவித்தார். தாக்குதலில் 11 இந்தியர்கள் உட்பட மொத்தம் 12 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஓமன் அதிகாரிகளின் உதவியுடன் காயமடைந்த பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மருத்துவச் சிகிச்சை பெற்று வருவதாகவும், வழங்கப்பட்ட ஆதரவுக்கு ஓமனுக்கு இந்தியா நன்றி தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.

இப்பகுதியில் கப்பல் போக்குவரத்தை குறிவைத்து தொடர்ச்சியாக நடைபெறும் தாக்குதல்கள் இந்தியாவுக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துவதாகவும், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை நிலைநாட்ட இத்தகைய தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இந்தியா மீண்டும் வலியுறுத்தியதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், வணிகக் கப்பல்கள், மாலுமிகள் மற்றும் பொதுமக்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் மீது தாக்குதல்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்றும், சர்வதேச நீர்வழிகள் வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தகம் விரைவில் மீண்டும் சீரடைய வேண்டும் என்றும் இந்தியா கேட்டுக்கொண்டது.