தமிழ்நாட்டின் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

பிற்பகல் 3 மணி நிலவரப்படி, மதுராந்தகத்தில் 70.31%, தாராபுரத்தில் 68.08% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல் மற்றும் சத்யாபாமா பதவியை ராஜினாமா செய்து பின்னர் த.வெ.க.-வில் இணைந்ததைத் தொடர்ந்து, இந்த இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

மதுராந்தகம் தொகுதியில் 2,13,689 வாக்காளர்கள் உள்ளனர்; 285 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மரகதம் குமரவேல் (த.வெ.க.), பரந்தாமன் (தி.மு.க.), கணிதா சம்பத் (அ.தி.மு.க.), சுகந்தி (கம்யூ.), ஜானகிராமன் (நாம் தமிழர்) உள்ளிட்ட மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தாராபுரம் தொகுதியில் 2,23,306 வாக்காளர்கள் உள்ளனர்; 320 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சத்யாபாமா (த.வெ.க.), சுகன்யா (தி.மு.க.), பானுமதி (அ.தி.மு.க.), லட்சுமணன் (இ.கம்யூ.), கார்த்திகா (நாம் தமிழர்) உள்ளிட்ட மொத்தம் 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.