மகாராஷ்டிரா உணவு பாதுகாப்பு ஆணையர் துக்காராம் முண்டேவை இந்திய உணவு பாதுகாப்புத் துறையின் “ராக் ஸ்டார்” என வர்ணித்து, ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

பதவியேற்ற முதல் நாளிலிருந்தே முண்டே உணவகங்கள் மற்றும் உணவு உற்பத்தி நிறுவனங்களில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். சோதனைகள் நடத்தப்பட்டு, விதிமீறிய இடங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன; கெட்டுப்போன, காலாவதியான மற்றும் கலப்பட உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளின் விளைவாக உணவகங்களில் உணவு பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிப்பு அதிகரிக்கத் தொடங்கியதாகவும், வியாபாரிகள் செயற்கை நிறமூட்டிகளைத் தவிர்க்க ஆரம்பித்ததால் பொதுமக்களுக்கு பலன் கிடைக்கிறது என்றும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது சோதனைகள் குறித்து உள்ளூர் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளிலும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருவதாக கூறப்படுகிறது.

“இந்தியாவில், ஒரு உணவு ஆய்வாளர் ஒரு ராக் ஸ்டார்” என்ற தலைப்பில் வெளியான அந்த செய்தியில், “உணவருந்துபவர்கள் அவரைப் போற்றுகிறார்கள்; உரிமையாளர்கள் அவருக்கு அஞ்சுகிறார்கள்” என்ற வாசகத்துடன் அவரது செயல்பாடுகள் விவரிக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் செய்தியில் அவரை “உணவுப் பாதுகாப்புப் பிரபலம்” எனவும் குறிப்பிட்டு, ஆய்வுகள் மூலம் உணவு சுகாதாரம் குறித்து கவனம் திரும்பியுள்ளதாகவும் பதிவு செய்துள்ளது.

இதற்கு பதிலளித்து சமூக வலைதளத்தில் முண்டே வெளியிட்ட பதிவில், நல்லாட்சி என்பது தலைப்புச் செய்திகளில் இடம்பிடிப்பது அல்ல; மாற்றத்தை ஏற்படுத்துவதே என கூறினார். உணவு பாதுகாப்பு என்பது மக்களைப் பாதுகாப்பதும் தரத்தை உயர்த்துவதும் என்றும், நியாயமாக இயங்கும் நிறுவனங்கள் நம்பகத்தன்மை பெறுவதுடன் துறை செயல்படுகிறது என்ற மக்கள் நம்பிக்கை வளரத் தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.