டில்லியில் இன்று (அக்.06) இண்டி கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் எனக் கோரி பேரணியாக சென்றனர். பார்லிமென்ட் வளாகத்திலிருந்து இந்திய தேர்தல் ஆணையத்தின் அலுவலகம் நோக்கி பதாகைகளுடன் அவர்கள் நகர்ந்தனர்.

பார்லிமென்ட் சாலையில் போலீசார் தடுப்புகள் அமைத்து பேரணியை தடுத்து நிறுத்தினர். தடுப்புகளை மீற முயன்றதாக கூறப்படும் நிலையில், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டனர்.

இந்த பேரணியில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டு போலீஸ் வேன்களில் அழைத்து செல்லப்பட்டனர். பார்லிமென்ட் மற்றும் தேர்தல் ஆணைய அலுவலகத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

வாக்காளர் பட்டியல் மாற்றங்கள் தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனை பாஜ மறுத்ததுடன், தேர்தல் ஆணையத்திற்கு எதிரான இண்டி கூட்டணியின் பேரணியை கடுமையாக விமர்சித்து, அமைதியின்மை உருவாக்கும் முயற்சி என குற்றம்சாட்டியது.