ரஷ்யாவில் பிளேக் கிருமி தாக்கம் தொடர்பான அச்சம் அதிகரித்துள்ள நிலையில், அங்கு ஒரு ஆய்வக ஊழியர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சம்பவம் ரஷ்யாவின் சைபீரியப் பகுதியான இர்குட்ஸ் மாகாணத்தில் உள்ள பிளேக் எதிர்ப்பு ஆராய்ச்சி மையத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. தார்யா ஷிபிலோவா என்ற பெண் லேப் டெக்னீஷியன் செப்.25 அன்று பரிசோதனைக்கான மாதிரிகளை சேகரித்தபோது, உயிருள்ள பாக்டீரியாக்கள் இருந்ததாக கூறப்படும் டெஸ்ட் டியூப் ஒன்று தவறுதலாக உடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து கடுமையான நிமோனியா காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அக்.1 அன்று உயிரிழந்தார். பிளேக் வேகமாக பரவக்கூடியதும் உயிருக்கு ஆபத்தானதும் என்பதால், பரவல் தடுப்பு குறித்து கவலை அதிகரித்துள்ளது.
அந்தப் பெண்ணுக்கு உண்மையில் பிளேக் உறுதியாக இருந்ததா, இருந்தால் அது இயற்கையாக ஏற்பட்டதா அல்லது ஆய்வகத்தில் கையாளப்பட்ட பாக்டீரியாவால் ஏற்பட்டதா என்பதைக் குறித்து ரஷ்யா தரப்பில் இதுவரை தெளிவான தகவல் வெளியிடப்படவில்லை. ஆய்வின் போது கிருமித் தாக்கம் காரணமாகவே உயிரிழந்தார் என்பதற்கு ஆதாரம் இல்லை என ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர். அவருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் சக ஆய்வாளர்கள் சுமார் 200 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலின்படி, பிளேக் தொற்று எலிகள் உள்ளிட்டவற்றுடன் தொடர்புடையதாக இருக்கலாம்; பாதிக்கப்பட்ட நபர் அல்லது விலங்கு இருமல், தும்மல் மூலம் காற்றின் வழியாகவும் பரவக்கூடும். அறிகுறிகள் தோன்றிய 24 மணி நேரத்துக்குள் கண்டறிந்து நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மூலம் சிகிச்சை தொடங்கினால் குணமடையும் வாய்ப்பு அதிகம்; சிகிச்சை தாமதமானால் 18 முதல் 24 மணி நேரத்துக்குள் உயிரிழப்பு ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பு கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





