ஆசிய நாடுகளுக்கு வழங்கப்படும் கச்சா எண்ணெய்க்கான அதிகாரப்பூர்வ விற்பனை விலையை சவுதி அரேபியா கணிசமாக குறைத்துள்ளது. இது சுமார் ஆறு ஆண்டுகளில் காணாத அளவுக்கு குறைந்த நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு சொந்தமான சவுதி அராம்கோ நிறுவனம் நவம்பர் மாதத்துக்கான விலையை அறிவித்து, ஆசிய வாடிக்கையாளர்களுக்கு பெரிய தள்ளுபடியை வழங்கியுள்ளது. முக்கியமான ‘அரப் லைட்’ தரம், ஓமன்/துபாய் குறியீட்டு விலையை விட பீப்பாய்க்கு சுமார் ₹480 குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது; அக்டோபர் விலையை விடவும் சுமார் ₹288 குறைவாக உள்ளது.
அதேபோல் ‘அரப் மீடியம்’ மற்றும் ‘அரப் ஹெவி’ தரங்களின் விலையும் பீப்பாய்க்கு அதிகபட்சம் சுமார் ₹488 வரை குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கு மாறாக, வடமேற்கு ஐரோப்பா மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளுக்கான விலையை சவுதி அரேபியா பீப்பாய்க்கு சுமார் ₹288 உயர்த்தியுள்ளது. அமெரிக்காவுக்கான விலையில் மாற்றமில்லை.
பிராந்திய மோதல்கள் மற்றும் போக்குவரத்து தடைகள் காரணமாக கடல்வழி சரக்கு கட்டணங்கள் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், ஆசிய வாடிக்கையாளர்கள் சந்திக்கும் சரக்கு செலவு சுமையை ஈடுகட்டவும், ஆசிய சந்தையில் தன் பங்கைக் காக்கவும் இந்த தள்ளுபடி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இந்தியா போன்ற முக்கிய ஆசிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஓரளவு நிம்மதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா தனது மொத்த இறக்குமதியில் 10%–18% வரை சவுதி அரேபியாவிலிருந்து பெறுகிறது; நடப்பு செப்டம்பரில் தினசரி சுமார் 5.17 லட்சம் பீப்பாய் இறக்குமதி செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





