தலைமை தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமாரை வழக்கு முடியும் வரை இடைக்காலமாக சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை திட்டவட்டமாக மறுத்தது. அதே நேரத்தில், இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு தேர்தல் ஆணையமும் மத்திய அரசும் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்தது.

நாடு முழுவதும் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (SIR) தொடர்பாக சர்ச்சை நீடிக்கும் நிலையில், பாட்னாவைச் சேர்ந்த ராகேஷ் குமார் சிங் மற்றும் வழக்கறிஞர் சைலேந்திர மணி திரிபாதி ஆகியோர் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். போலி வாக்காளர்களை நீக்கவே இந்த நடவடிக்கை என தேர்தல் ஆணையம் கூறினாலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இது வாக்காளர்களின் உரிமையை பாதிக்கக்கூடும் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மனுக்களில், SIR தொடர்பான முடிவுகளை மற்ற இரு தேர்தல் ஆணையர்களின் ஒப்புதல் இன்றி தலைமை தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக எடுத்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. மேலும், கடந்த 10 மாதங்களில் SIR தொடர்பான உத்தரவுகள் மற்றும் முடிவுகள் குறித்து தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் 14 முறை ஆட்சேபனை தெரிவித்ததாக வெளியான செய்தியும் விவாதத்தை தீவிரப்படுத்தியது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வில் (நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி, வி.மோகனா) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விகாஷ் சிங், தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் ஒருமனதாக அல்லது பெரும்பான்மை அடிப்படையில் எடுக்கப்பட வேண்டும் என சட்டம் வலியுறுத்துவதாகவும், வாக்குரிமை பாதுகாப்பு குறித்த அச்சம் மக்களிடம் இருப்பதாகவும் வாதிட்டார்.

இதற்கு நீதிபதிகள், முதலில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் சட்ட விதிமீறல்கள் உள்ளனவா என்பதை ஆராய வேண்டுமென தெரிவித்தனர். விதிமீறல்கள் நிரூபிக்கப்பட்டால் முடிவுகளை ரத்து செய்ய முடியும் என்றும், முடிவெடுக்கும் அதிகாரம் யாருக்கு என்பது உள்ளிட்ட கேள்விகளும் பரிசீலிக்கப்படும் என்றும் கூறி, தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசின் பதிலை கோரினர்.