சென்னை அடுத்த செம்மஞ்சேரியில் ரூ.261 கோடி மதிப்பில் உருவாக்க திட்டமிடப்பட்ட ‘மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி’ திட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த திட்டத்தை ஜே.எஸ்.டபிள்யூ. நிறுவனத்திடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தை விளையாட்டு தலைநகரமாக மாற்றும் நோக்கில் சர்வதேச தரத்திலான வசதிகளுடன் இந்த விளையாட்டு நகரம் அமைக்கப்பட இருந்தது. இதற்காக இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆர்.பி.பி. நிறுவனத்துடன் டெண்டர் நடைமுறை மேற்கொள்ளப்பட்டு, பிப்.18-ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டதுடன், ரூ.205.89 கோடி மதிப்பில் ஒப்பந்தமும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, ஆகஸ்ட் 12-ம் தேதி முன் அறிவிப்பின்றி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. திட்டத்தை மேலும் பெரியதாக மாற்றி, சர்வதேச போட்டிகளை நடத்தும் வகையில் மறுவடிவமைக்க உள்ளதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், திட்டம் ஜே.எஸ்.டபிள்யூ. நோக்கி நகர்கிறது என்ற தகவல் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஜே.எஸ்.டபிள்யூ. குழும இயக்குநர் பார்த் ஜிண்டால் தமிழக ஜூடோ சங்கத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதும் சர்ச்சையை அதிகரித்துள்ளதாக விளையாட்டு வட்டாரங்கள் கூறுகின்றன.
ஏற்கனவே ஒப்பந்தம் பெற்ற நிறுவனங்களின் நிலை என்ன, மறுவடிவமைப்பு அவசியம் என்ன, வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்த காரணம் என்ன, டெண்டர் நடைமுறை வெளிப்படையாக தொடருகிறதா போன்ற கேள்விகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மேலும், அமைச்சர் ஒருவருக்கும் ஜே.எஸ்.டபிள்யூ. குழுமத்துக்கும் தொழில்/முதலீடு தொடர்பான தொடர்புகள் இருப்பதாக விளையாட்டு வட்டாரங்களில் பேசப்படுவதும் குறிப்பிடப்படுகிறது.





