பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில் பாதுகாப்பு நடவடிக்கைகள் ‘காகிதத்தில்’ மட்டுமே நின்றுவிடக் கூடாது; களத்தில் தெளிவான நடவடிக்கை இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளது. குற்றவாளிகள் அஞ்சும் அளவுக்கு காவல் அமைப்பு வலுவாக செயல்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.

டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் நடந்ததாக குறிப்பிடப்பட்ட பல சம்பவங்களை நீதிமன்றம் கவனத்தில் எடுத்தது. ஆஸ்தா குன்ஜ் பூங்கா அருகே 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், ஸ்வரூப் நகரில் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு பின் படுகொலை செய்யப்பட்டதாகவும், ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தள்ளிவிடப்பட்டதாகவும் கூறப்பட்ட சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக குறிப்பிடப்பட்டது.

இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்துக் கொண்டு விசாரித்து வருகிறது. நீதிபதி ஜே.பி. பர்திவாலா தலைமையிலான அமர்வு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க மத்திய அரசும் டில்லி போலீசும் எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன என்பதையும், பாதுகாப்பு இல்லாத பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்கும் நடைமுறை உள்ளதா என்பதையும் கேள்வி எழுப்பியது.

உத்தரவில், குற்றங்களில் ஈடுபடுவோர் விரைவான மற்றும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை உணரும் வகையில் நடவடிக்கை இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. நிலைமை தீவிரமாக இருக்கும்போது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க போலீசார் தயங்கக் கூடாது; மக்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை தர வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

மேலும், வெறும் கோப்புகள் ஆய்வு, புள்ளிவிவரங்கள் ஆகியவற்றில் மட்டும் நின்றுவிடாமல், பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் இருந்து பாதுகாப்பு குறைகள் என்ன என்பதை அறிந்து தீர்வு காண வேண்டும் என்று கூறியது. டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் பெண்கள் இரவு நேரத்திலும் நடந்து செல்லவும், மெட்ரோவில் பயணிக்கவும் முழு பாதுகாப்பை உணரும் சூழலை அரசு உருவாக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.