திருச்சியில் கர்ப்பிணியருக்கான சமூக வளைகாப்பு அரசு நிகழ்ச்சியில், குத்துவிளக்கு ஏற்றும் வரிசை தொடர்பாக எதிர்பாராத வாக்குவாதம் ஏற்பட்டது.

சமூக நலத்துறை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதலில் அமைச்சர் ரமேஷ் குத்துவிளக்கை ஏற்றினார். தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் கதிரவன், விக்னேஷ் ஆகியோர் விளக்கேற்றிய பின்னர், காங். எம்.பி. கிறிஸ்டோபர் திலக்கிடம் மெழுகுவர்த்தி வழங்கப்பட்டது.

அப்போது த.வெ.க. எம்.எல்.ஏ. விஜி குறுக்கிட்டு, தன்னை அழைக்காமல் எம்.பி.யை அழைத்தது குறித்து கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனே மெழுகுவர்த்தி அவரிடம் கொடுக்கப்பட்ட நிலையில், விஜியின் கை பட்டதால் அது கீழே விழுந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அமைச்சர் ரமேஷ் தலையிட்டு நிலைமையை சமாதானப்படுத்தி, மெழுகுவர்த்தியை விஜியிடம் கொடுத்து குத்துவிளக்கை ஏற்றச் செய்தார். கிறிஸ்டோபர் திலக் குத்துவிளக்கு ஏற்றாமல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

மேலும், புகைப்படம் எடுக்கும் போது எம்.எல்.ஏ. கதிரவன் மற்றும் எம்.எல்.ஏ. விஜி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.