டெல் அவிவ் செல்லும் பயணிகள் விமானத்தை கடத்தி விமான நிலையத்தில் மோதச் செய்ய திட்டமிட்டதாக கூறப்படும் ஓமன் நாட்டு துணை விமானிக்கு, ஐக்கிய அரபு அமீரகத்தில் மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக யுஏஇ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு சென்ற ‘பிளை துபாய்’ விமானத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. துணை விமானி கட்டுப்பாட்டை கைப்பற்ற முயன்ற நிலையில், தாக்கப்பட்ட போதிலும் இந்திய விமானி ஸ்மிட் மச்சார் துணிச்சலுடன் எதிர்த்து சதி திட்டத்தை முறியடித்ததாக தகவல்.

கைது செய்யப்பட்ட ஹமாம் அல் ஹம்மாமி என்பவரிடம் யுஏஇயில் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் முயன்றது பயங்கரவாத சதிச்செயலாகும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக செய்தி கூறுகிறது.

விசாரணையில், சில மாதங்களுக்கு முன்பே இஸ்ரேலுக்கு விமான சேவை வழங்கும் நிறுவனங்கள் குறித்து அவர் ஆய்வு செய்ததும், அந்த நாட்டிற்குச் சென்று வந்ததும் தெரிய வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. நீதிமன்றத்தில் அரசு தரப்பு மிகக் கடுமையான தண்டனையை வலியுறுத்த முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சவுதி மற்றும் ஓமன் அதிகாரிகளும் அல் ஹம்மாமியிடம் தொடர்ந்து விசாரணை நடத்த உள்ளனர். இஸ்ரேல் செல்லும் விமானத்தை இயக்க அவர் எவ்வாறு அனுமதி பெற்றார் என்ற கேள்விகளுக்கிடையே இந்த விசாரணை நடைபெறுகிறது.