வாஷிங்டன்: இந்திய விமானி ஸ்மிட் மச்சாரை தாக்கியதாக கூறப்படும் ஓமன் துணை விமானி அல் ஹம்மாமி குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தகவலின்படி, அவரது இணைய செயல்பாடுகளை ஆய்வு செய்த ஓமன் அதிகாரிகள் அவரை விமானியாக பணியாற்றத் தடை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் பிற நிறுவனத்தில் சேர்ந்தபோது, அவரது முந்தைய நடவடிக்கைகள் குறித்து புதிய நிறுவனத்திற்கு தகவல் பகிரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக பிளை துபாய் போன்ற நிறுவனங்களுக்கு தேவையான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை என்ற கவலைவும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ், அல் ஹம்மாமி “பிரச்னைக்குரிய நபர்” என்றும், அவர் அமெரிக்க உளவுத்துறையைச் சேர்ந்தவர் அல்ல என்றும் தெரிவித்தார். அவரது முந்தைய நடவடிக்கைகளை கருத்தில் கொண்டால், அவரை விமானியாக பணியாற்ற அனுமதித்திருக்கக் கூடாது என அவர் கூறினார்.
விமானங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய நபர்கள் விமானங்களை இயக்காமல் இருப்பதை உறுதி செய்ய அமெரிக்காவின் நடைமுறைகள் மீளாய்வு செய்யப்படுகின்றன என்றும், அமெரிக்காவிற்கு வரும் வெளிநாட்டு விமானிகள் பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறுமா என்பதை கவனிக்க வேண்டுமெனவும் வான்ஸ் கூறினார்.
மேலும் பிளை துபாய் சம்பவத்தில் ஈரானின் பங்கு குறித்து உறுதியான ஆதாரம் எதையும் தாம் காணவில்லை என்றும், இதை அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளின் மதிப்பீட்டிற்கு விட்டுவிடுவதாகவும் அவர் தெரிவித்தார்.





