மீனவர் பிரச்னைகளுக்கு தீர்வு காண அமைக்கப்பட்டுள்ள இந்தியா–இலங்கை கூட்டு பணிக் குழுவை உரிய முறையில் புனரமைத்து, அதன் கூட்டத்தை விரைவில் நடத்த வேண்டும் என முதல்வர் விஜய், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், அக்டோபர் 3-ம் தேதி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதையும், அவர்களின் விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராமநாதபுரம் மற்றும் அதை ஒட்டியுள்ள கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் பாரம்பரியமாக பாக் ஜலசந்தி பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களின் வாழ்வாதாரத்தில் படகுகள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் தெரிவித்தார். படகுகள் பறிமுதல் செய்யப்படுவது குடும்பங்களுக்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.

இரு நாடுகளின் மீனவர்களுக்கும் தொடர்பான பிரச்னைகளுக்கு ஆக்கபூர்வமான தீர்வுகள் காணப்பட வேண்டும் என வலியுறுத்திய முதல்வர், இலங்கையில் சிறையில் உள்ள 20 மீனவர்களை விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட 270 படகுகளை மீட்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.