பெண் செய்தியாளரை போலீஸ் அதிகாரி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறி சமூக ஊடகத்தில் பரவிய வீடியோ போலியானது என டில்லி போலீஸ் தெரிவித்துள்ளது. அந்த வீடியோவை உருவாக்கி பரப்பியதாக நதீம் அஹமதுவை போலீசார் கைது செய்தனர்; போலீசாருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கமே இதன் பின்னணி எனவும் கூறினர்.

ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தின் போது இந்த விவகாரம் தீவிரமடைந்தது. தலைமை தேர்தல் கமிஷனர் மற்ற தேர்தல் கமிஷனர்களுடன் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டதாக குற்றம்சாட்டி ஒரு அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அந்த இடத்தில் பத்திரிகையாளர்கள் போல நடித்து சிலர் மைக்குடன் போலீசாரிடம் கடுமையாக வாக்குவாதம் செய்து, அப்புறப்படுத்தும் முயற்சிக்கும் ஒத்துழைக்காமல் முரண்டுபிடித்ததாக போலீசார் கூறினர்.

அந்த சூழலில், உதவி கமிஷனர் விவேக் பகத் பெண் பத்திரிகையாளரை துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதை உறுதிப்படுத்தும் வகையில் ‘சிசிடிவி காட்சி’ என கூறி ஒரு வீடியோ சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்டு, பல்வேறு கட்சிகள் போலீசாரை விமர்சித்தன.

ஆனால் டில்லி சைபர் பிரிவு போலீசார் வீடியோவை ஆய்வு செய்ததில், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்படுத்தி அது போலியாக உருவாக்கப்பட்டதாக தெரியவந்தது. விசாரணையை துரிதப்படுத்தியதில் வீடியோவை உருவாக்கி பரப்பியதாக நதீம் அஹமதுவை கைது செய்தனர்; அவர் யூடியூப் சேனல் நடத்துவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இந்த வீடியோ எதற்காக உருவாக்கப்பட்டது, பின்னணியில் யார் உள்ளனர், எந்தக் கட்சிக்காக இது செய்யப்பட்டது, நிதியுதவி அளித்தது யார் என்பன உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விசாரணை தொடர்கிறது. டில்லி இணை கமிஷனர் மஞ்சீத் கூறுகையில், ஹரியானா பல்வால் பகுதியைச் சேர்ந்த நதீம் அஹமது டில்லி சாகெட் பகுதியில் மதராஸாவில் படித்தவர் என்றும், போலீசாரின் பெயரை கெடுக்கவும் போராட்டக்காரர்களை தூண்டவும் போலி வீடியோ செய்ததாக அவர் கூறியதாகவும் தெரிவித்தார்.