லண்டன் சாலையில் ஒரு ஆட்டோரிக்ஷா ஓடும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவை மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அவர் பதிவில், “ஆட்டோரிக்ஷா பிரிட்டனுக்கு வந்துவிட்டது; அதுவும் மஹிந்திரா நிறுவனத்துடையது” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் பொதுவாகப் பயணத்திற்கு பயன்படும் வாகனம் பிரிட்டன் சாலையில் தோன்றியது பலரின் கவனத்தை ஈர்த்தது.
இதைக் கண்ட நெட்டிசன்கள் பலவிதமான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஒருவர், “இன்டிகேட்டர் போட்டு திரும்ப வேண்டும்; எந்த பக்கம் இன்டிகேட்டர் போடுகிறாரோ அந்தப் பக்கம் திரும்பச் சொல்லுங்கள்” என்று நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சிலர் “தலைகீழ் காலனித்துவம்” என கிண்டல் செய்து, லண்டனில் மழை அல்லது டிராபிக் காரணமாக வழி மறுக்கும் ஆட்டோ டிரைவர் காட்சியை கற்பனை செய்து எழுதியுள்ளனர். “பெருமைக்குரிய தருணம்” என்ற கருத்துகளும், “அடுத்தது கட்டண பிரச்னை வரும்” என்ற கிண்டல் பதிவுகளும் தொடர்ந்து குவிந்துள்ளன.





