ஊர்க்காவல் படையில் சேர்வதற்கான உடல் தகுதி தேர்வில், சேலை அணிந்தபடி வெறும் கால்களுடன் 1,600 மீட்டர் ஓடிய பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
அந்த பெண் ஜார்க்கண்ட் மாநிலம் ராம்கர் மாவட்டத்தைச் சேர்ந்த கவிதா குமாரி என தெரிவிக்கப்பட்டுள்ளது. கணவரை இழந்த அவர், வருவாய் வழி இல்லாத நிலையில் இரண்டு குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்த மாமனார்–மாமியாரை காப்பாற்றும் பொறுப்பை ஏற்றுள்ளார்.
ஊர்க்காவல் படையில் ஆட்தேர்வு நடப்பதாக அறிந்ததும் விண்ணப்பித்த கவிதா, உடல் திறன் தேர்வுக்கு சென்றார். டிராக் சூட், ஷூ போன்ற வசதிகள் இல்லாததால், சேலையுடன் வெற்றுக்கால்களில் 1,600 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்றார்.
அந்த ஓட்டத்தை 10 நிமிடத்தில் முடித்தாலே போதும் என்ற நிலையில், கவிதா அதை வெறும் 6 நிமிடங்களில் முடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பலரும் அவரது முயற்சியை பாராட்டி வருகின்றனர்.
தன் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஊர்க்காவல் படையில் சேர வேண்டும் என்ற எண்ணமே தன்னை வேகமாக ஓட வைத்ததாக கவிதா கூறியுள்ளார். நெட்டிசன்கள் இதை “குழந்தைகளுக்காக ஓடும் ஒரு தாயின் ஓட்டம்” என உணர்ச்சிப்பூர்வமாக பதிவிட்டு பாராட்டுகின்றனர்.





