அரசுப் பதவிகளில் 25 ஆண்டை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடியை பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே பாராட்டியுள்ளார். சர்வதேச விவகாரங்களில் அண்டை நாடுகளுக்கு பிரதமர் மோடி எப்போதும் முன்னுரிமை அளிப்பதாக அவர் கூறினார்.

ஜி20 அமைப்பில் ஆப்ரிக்க யூனியனை நிரந்தர உறுப்பினராக்குவதில் பிரதமர் மோடி முக்கிய பங்காற்றியதாகவும், இதன் மூலம் வளரும் நாடுகளின் குரல் உயர்ந்ததாகவும் டோப்கே தெரிவித்தார். இந்தியாவின் வளர்ச்சி பூடான் உள்ளிட்ட நாடுகளுக்கு பலனளிப்பதாகவும், பெரிய சந்தை, முதலீடு மற்றும் தொழில்நுட்ப வாய்ப்புகளை இந்தியா வழங்குவதாகவும் அவர் கூறினார்.

2014-ல் பிரதமராக பொறுப்பேற்றபோது மோடி தனது முதல் வெளிநாட்டு பயணமாக பூடானைத் தேர்வு செய்ததை நினைவுகூர்ந்த டோப்கே, மோடி தமக்கு அண்ணனைப் போன்றவர் என்றார். மேலும், அவரை கடவுள் விஷ்ணுவின் அவதாரமாக பார்க்கிறேன் என்றும் தெரிவித்தார்.

பூடானின் 11-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் போது இந்தியா வழங்கிய உதவியால் பல திட்டங்களை அரசு செயல்படுத்த முடிந்ததாகவும், அதனால் தாம் மீண்டும் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். தற்போது 13-வது ஐந்தாண்டுத் திட்டத்திற்கான நிதியை இருமடங்காக உயர்த்தி ரூ.10,000 கோடியாக்கியதாகவும், ரயில்வே, உள்கட்டமைப்பு மற்றும் முதலீடுகள் வழியாக இந்தியா பூடானுக்கு முழு ஆதரவளித்து வருவதாகவும் டோப்கே தெரிவித்தார்.