டெல்லியில் சில நாட்களுக்கு முன் நடந்த போராட்டத்தின் போது, பெண் செய்தியாளர் ஒருவரை டெல்லி போலீஸ் அதிகாரி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறி பரவிய வீடியோ குறித்து பாஜ செவ்வாய்க்கிழமை கடும் குற்றச்சாட்டை முன்வைத்தது.
அந்தக் காணொளியை காங்கிரஸ் தரப்பு முன்னின்று பரப்பியதாகவும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் அந்த அதிகாரி மீது குற்றச்சாட்டு பதிவிட்டதாகவும் பாஜ தெரிவித்தது. இதனை டெல்லி போலீசார் அப்போது மறுத்திருந்தனர்.
பாஜ தலைவர் பிரதீப் பண்டாரி கூறுகையில், டெல்லி போலீசார் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அந்த வீடியோ போலி எனத் தெரியவந்ததாகவும், அது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டதாகவும் கூறினார். மேலும், நதீம் அகமது என்பவர் இதை உருவாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் அமைப்பு சுமார் 24 மணிநேரம் அந்த வீடியோவை மிகைப்படுத்தி முன்னிறுத்தியதாக பண்டாரி குற்றம்சாட்டினார். தற்போது ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தரப்பு மவுனமாக இருப்பதாக கூறிய அவர், இந்த விவகாரத்தில் அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.





