கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரை கவர்களில் தமிழ், ஆங்கிலத்துடன் ஹிந்தியிலும் குறிப்புகள் அச்சிடப்பட்டுள்ளதாக முன்னாள் தொழில்துறை அமைச்சர் ராஜா எக்ஸ் தளத்தில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தகவலின்படி, 2024 மே மாதம் வரை பிரத்யேக பிரவுன் நிற கவரில் மாத்திரைகள் வழங்கும் நடைமுறை இல்லை. இதுகுறித்து ‘தினமலர்’ செய்தி வெளியான பின்னர், காலை, மதியம், இரவு என அச்சிடப்பட்ட கவர்களில் மாத்திரைகள் வழங்கப்படத் தொடங்கியது. இதற்கான செலவை சில தனியார் நிறுவனங்கள் ஏற்கின்றன; சிந்தாமணி கூட்டுறவு நிறுவனம் சார்பில் கவர்கள் அச்சிடப்படுகின்றன.

அரசு மருத்துவமனைக்கு வடமாநில தொழிலாளர்கள் பலர் சிகிச்சைக்காக வருவதால், அவர்களுக்கு புரியும் வகையில் தமிழ், ஆங்கிலத்துடன் ஹிந்தியிலும் குறிப்புகள் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, திமுக ஆட்சி காலத்திலும் இதே நடைமுறை தொடர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

ராஜாவின் பதிவு வைரலானதைத் தொடர்ந்து, பழைய கவர்களை இனி பயன்படுத்த வேண்டாம் என செவ்வாய்க்கிழமை இரவு மருந்தாளுனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பிட மருத்துவ அலுவலர் சரவணபிரியா, இன்று முதல் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் குறிப்புகள் இடம்பெறும் புதிய கவர்களில் மாத்திரைகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.