சென்னை: விவசாயிகளின் நலனில் த.வெ.க. அரசுக்கு அக்கறை இல்லை என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி குற்றம்சாட்டியுள்ளார். வேளாண் துறையின் முக்கிய நிர்வாகப் பதவி காலியாக இருப்பதே இதற்கான உதாரணம் என அவர் கூறினார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், வேளாண் துறை செயலராக இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சங்கர் தொல்லியல் ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு ஒரு மாதமாகியும், புதிய வேளாண் துறை செயலர் நியமிக்கப்படவில்லை என்றும், இதனால் விவசாயிகளிடையே கவலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தனியாக நிதிநிலை அறிக்கை கொண்ட வேளாண் துறைக்கு முழுநேர பொறுப்பில் செயலர் இல்லாததை அரசு எவ்வாறு நியாயப்படுத்தும் என அவர் கேள்வி எழுப்பினார். பருவமழை தொடங்க உள்ள நிலையில், துறைக்கு நிலையான நிர்வாகத் தலைமையம் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், தேர்தல் அறிக்கையில் கூறியபடி பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, வரும் 14ம் தேதி சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடப் போவதாக விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சூழலில், அனுபவம் வாய்ந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியை முழுநேர வேளாண் துறை செயலராக நியமிக்காமல் பொறுப்பு செயலரிடம் துறையை விட்டிருப்பது அரசின் அக்கறையின்மையை காட்டுகிறது என கூறிய அவர், புதிய முழுநேர செயலரை உடனடியாக நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.





