பிளைதுபாய் பயணிகள் விமானம் கடத்தப்பட முயன்ற சம்பவத்தின் போது, அது இஸ்ரேல் வான்வெளிக்குள் நுழைந்தால் சுட்டு வீழ்த்தும் அளவுக்கு இஸ்ரேல் தயார்நிலையில் இருந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நோக்கிச் சென்ற பிளைதுபாய் விமானத்தில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. ஓமனைச் சேர்ந்த துணை விமானி ஹமால் அல் ஹமாமி விமானத்தை கைப்பற்ற முயன்றதாக தகவல் தெரிவிக்கிறது.
அந்த முயற்சியைத் தடுக்க முயன்ற கேப்டன் ஸ்மிட் மச்சார் கடுமையாக தாக்கப்பட்டார். அவசரகால பயன்பாட்டுக்காக விமானத்தில் வைத்திருக்கும் கோடாரியால் தலை, கை, கால்கள், நெஞ்சு மற்றும் மேல் வயிறு பகுதிகளில் காயமடைந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தின் போது விமானம் கடத்தப்பட முயல்கிறது என்ற அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விமானத்தில் பயணித்தவர்களில் பெரும்பாலானோர் இஸ்ரேலியர்கள் என்பதுடன், கட்டடங்கள் மீது மோதச் செய்தால் பெரும் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருந்ததால், இஸ்ரேல் ராணுவம் சுட்டு வீழ்த்த தயாராக இருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் விமானம் இஸ்ரேல் வான்வெளிக்குள் செல்லாமல் சவுதி அரேபியா நோக்கி திசைமாற்றம் செய்ததால், பெரிய பேராபத்து தவிர்க்கப்பட்டதாக அந்த தகவல் கூறுகிறது.





