உத்தர பிரதேச மாநிலம் பிருந்தாவனில் பிரேமானந்த் மஹாராஜ் தொடர்புடைய ஆசிரமம் ஒன்று, செப்டம்பர் 25 அன்று நடந்த சம்பவத்துக்குப் பிறகு சர்ச்சையில் சிக்கியுள்ளது. அன்றைய தினம் ஆசிரமத்தின் நான்காவது மாடியில் இருந்து ஒரு சீடர் கீழே விழுந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்த பின்னணியில், ஆசிரமத்தின் செல்வாக்கை உயர்த்தும் நோக்கில் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியை ரூ.5 கோடி கொடுத்து அழைத்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. விராட் கோலியும் அவரது மனைவி நடிகை அனுஷ்கா சர்மாவும் 2023 ஜனவரி 4 முதல் அந்த ஆசிரமத்திற்கு அடிக்கடி சென்று வந்ததாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலளித்து விராட் கோலி தரப்பில் வெளியான அறிக்கையில், குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என்றும், எந்த ஆதாரமும் இல்லாதது என்றும், உண்மைக்கு புறம்பானது என்றும் திட்டவட்டமாக மறுக்கப்பட்டது.
மேலும், பிரேமானந்த் மஹாராஜ் மீது இருந்த பக்தி மற்றும் நம்பிக்கையின் காரணமாகவே விராட் கோலி அங்கு சென்றதாகவும், இத்தகைய குற்றச்சாட்டுகளை பெரிதுபடுத்தும் முன் உண்மையை சரிபார்த்து செய்தி வெளியிட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.





