செவிலியர்கள் நடத்தும் போராட்டத்தில் திமுகவினரின் பங்கேற்பு குறித்து அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி எழுப்பினார். அரசியல் தலையீடு போராட்டத்தின் திசையை மாற்றக்கூடும் என அவர் கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எங்குமே போராட்டத்துக்கு அனுமதி இல்லை” என்ற தகவல் தவறானது என தெரிவித்தார். அனுமதி வழங்கப்பட்ட இடங்களில் போராட்டம் நடத்த போலீசார் தொடர்ந்து அனுமதி அளித்து வருவதாகவும், தற்போதைய அரசு போராட்டங்களுக்கு தடையிடவில்லை என்றும் கூறினார்.

செவிலியர் போராட்டத்தில் முன்னாள் திமுக அமைச்சர் மனோ தங்கராஜ் இருப்பது குறித்து அவர் கேள்வி எழுப்பினார். இப்படிப்பட்டவர்கள் உள்ளே சென்று அமர்ந்து போராட்டத்தை அரசியலாக்கி கலவர சூழலாக மாற்ற முயல்வதாகவும், இதை போலீசார் அவர்களுக்கு புரிய வைத்ததாகவும் அவர் தெரிவித்தார். மேலும், அந்தத் துறையுடன் தொடர்பில்லாத முன்னாள் அமைச்சருடன் அரசு எப்படி பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் அவர் கேட்டார்.

மின்சாரம் தொடர்பாக, மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு வர வேண்டிய மின்சாரம் வரவில்லை என நிர்மல் குமார் கூறினார். பீக் ஹவர்களில் மின்தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க வெளிச்சந்தையிலிருந்து மின்சாரம் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் தேவைய அதிகரிக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், ஜூன்-ஜூலை வரை தேவைய அதிகமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.