சென்னை, பெரம்பூர் சட்டசபைத் தொகுதியில் முதல்வர் விஜய் பெற்ற வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது தரப்பு செவ்வாய்க்கிழமை வாதிட்டது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட விஜய், 53,715 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் தேர்தல் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன் நடைபெறும் இறுதி விசாரணையில், இரண்டாவது நாளாக வாதிட்ட முதல்வர் தரப்பு, வேட்புமனுவில் தன்னுக்கும் மனைவிக்கும் சொந்தமான சொத்து விவரங்கள் மற்றும் வருமான வரி தொடர்பான தகவல்கள் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளன; எந்த தகவலும் மறைக்கப்படவில்லை என தெரிவித்தது.
சில சிறிய தவறுகள் இருந்தாலும், அதனால் வேட்புமனு ஏற்றதே தவறு என்று கூற முடியாது என்றும், குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இல்லாததால் தேர்தல் மனுக்கள் நிராகரிக்கப்பட வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.
இதையடுத்து, மனுதாரர்கள் தரப்பு வாதங்களை கேட்பதற்காக வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.





