அக்.11 அன்று பிரதமர் நரேந்திர மோடி சென்னை வர உள்ளதாகவும், மெட்ரோ ரயில் தொடர்பான நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு திட்ட தொடக்கங்கள் மற்றும் பங்கேற்புகள் இடம்பெற உள்ளதாகவும் பயண அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அட்டவணைப்படி, அவர் டில்லியிலிருந்து விமானப்படை விமானத்தில் புறப்பட்டு காலை 10:55 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் நந்தம்பாக்கம் ஹெலிகாப்டர் தளத்திற்கு சென்று, பின்னர் காரில் காலை 11:30 மணிக்கு பூந்தமல்லி மெட்ரோ நிலையத்தை அடைகிறார்.
பூந்தமல்லியிலிருந்து போரூர் வரை மெட்ரோவில் பயணம் செய்ய உள்ளார்; இந்த பயணத்தில் முதல்வர் விஜய் உடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ பயணத்திற்குப் பிறகு மதியம் 12:25 மணிக்கு சாலை வழியாக ஐ.ஐ.டி. சென்னை செல்லும் அவர், பகல் 1:45 மணி வரை அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அங்கு உள்ள மூளை ஆராய்ச்சி மையத்தை பார்வையிட்டு, முன்னணி ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் கலந்துரையாடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மதியம் 2:00 மணிக்கு நடைபெறும் நிகழ்வில், சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் பணிகள் முடிக்கப்பட்ட பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ சேவையை பிரதமர் தொடங்கி வைக்கிறார். மேலும் கோவை சங்கர நேத்ராலயாவின் பொன்விழா நிகழ்ச்சியில் காணொலி மாநாடு வழியாக பங்கேற்கிறார்.
ஐ.ஐ.டி.யில் இசையமைப்பாளர் இளையராஜாவை சார்ந்த இசை உயர்திறன் மையத்தை தொடங்கி வைப்பதுடன், பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த பணிகளையும் திறந்து வைக்க உள்ளார். பின்னர் மாலை 3:30 மணிக்கு வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் சிவன் கோவிலில் வழிபட்டு, சென்னை வர்த்தக மையத்தில் ஜெயகோபால் கரோடியா ஹிந்து வித்யாலயா பள்ளி பொன்விழாவில் பங்கேற்று, மாலை 5:15 மணியளவில் சென்னை விமான நிலையம் வழியாக டில்லி புறப்படுகிறார்.





