புதுடில்லி: லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, தன் மீது பதிவு செய்யப்படும் ஒவ்வொரு எப்ஐஆரும் “பதக்கம்” போன்றது எனக் கூறினார். தற்போது தன் மீது 45 வழக்குகள் உள்ளதாகவும், அது 100 ஆக வேண்டும் என்பதே தன் “இலக்கு” என்றும் தெரிவித்தார்.
டில்லியில் நடந்த போராட்டத்தின் போது அனுமதியின்றி ஆகாஷ்வாணி பவன் வளாகத்துக்குள் நுழைந்ததாகக் கூறி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மீது டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்ததைத் தொடர்ந்து அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.
நிருபர்களிடம் பேசிய ராகுல், தலைமை தேர்தல் கமிஷனர் உட்பட மூன்று தேர்தல் கமிஷனர்களை சந்திக்க எம்பிக்கள் முயன்றதாகவும், ஆனால் அவர்கள் சந்திக்க மறுத்துவிட்டதாகவும் கூறினார். மேலும், அங்கு போராட்டம் நடத்த முடியாது என டில்லி போலீசார் தடுத்து நிறுத்தியதாகவும் தெரிவித்தார்.
போராட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட இடமான ஜந்தர் மந்தருக்குச் சென்று அங்கு அமர்ந்து, ஞானேஷ் குமார் இந்த நாட்டின் முறையான தேர்தல் கமிஷனர் அல்ல என்பதை நாட்டுக்கு தெரிவிக்கத் திட்டமிட்டுள்ளதாக ராகுல் கூறினார். தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலகியே ஆக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.





