புதுடில்லி: டில்லி ஆகாஷ்வாணி பவனில் உள்ள ஆலமரத்தடியில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வாத்ரா உள்ளிட்டோர் அமர்ந்திருந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இது “போராட்டம்” எனவும் குறிப்பிடப்படுகிறது.

அக்.06 அன்று தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரின் ராஜினாமாவை வலியுறுத்தி ராகுல் ஊர்வலமாக புறப்பட்டதாகவும், வழியிலேயே போலீசார் தடுப்புகள் அமைத்து ஊர்வலத்தை தடுத்ததாகவும் செய்தி கூறுகிறது.

கடுமையான கட்டுப்பாடுகளுக்கிடையிலும் ராகுல், பிரியங்கா மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஆகாஷ்வாணி பவனின் கேட் எண் 3 வழியாக வளாகத்திற்குள் நுழைந்தனர். பின்னர் காங்கிரஸ் மற்றும் இண்டி கூட்டணி கட்சி தலைவர்கள் பெரிய ஆலமரத்தடியில் திரண்டனர்.

அங்கு மெத்தை, தரைவிரிப்புகளை விரித்து அமர்ந்ததாகவும், டில்லியின் முன்னணி உணவகங்களில் இருந்து உணவுகள் வரவழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உணவருந்தியபடி உரையாடி, அவ்வப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்ததாகவும் கூறப்படுகிறது.

ராகுல் என்ன சாப்பிடுகிறார், பிரியங்கா என்ன செய்கிறார் என்பதுபோன்ற காட்சிகள் தொடர்ந்து வலைதளங்களில் வெளியானதாகவும், வளாகத்தில் இருந்த ஆகாஷ்வாணி ஊழியர்கள் இதை பார்த்ததாகவும் செய்தி குறிப்பிடுகிறது.