கச்சத்தீவு விவகாரத்தின் பின்னணியில் தமிழக மீனவர்களின் பாதுகாப்பும் வாழ்வாதாரமும் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது; அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கச்சத்தீவை மீட்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு வந்தபோது, பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதிகளுக்குச் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் அடிக்கடி கைது செய்யப்படுவதாகவும், அவர்களின் விசைப்படகுகள், வலைகள் உள்ளிட்ட உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படுவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மீனவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்சுகின், இத்தகைய அத்துமீறல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும், தொடர்ச்சியான கைது மற்றும் பறிமுதல் நடவடிக்கைகள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கின்றன என்றும் வாதிட்டார்.

இதற்கு மத்திய அரசு தரப்பில், சர்வதேச கடல் எல்லையை கடந்து மீன்பிடிப்பவர்களையே இலங்கை கடற்படை கைது செய்கிறது; இந்திய கடல் எல்லைக்குள் இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதில்லை என்றும், இது இரு நாடுகளுக்கிடையிலான வெளியுறவு கொள்கை சார்ந்த விவகாரம் என்பதால் நீதிமன்றம் நேரடியாக தலையிட முடியாது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.

தமிழக அரசு மற்றும் தி.மு.க. தரப்பிலும் கச்சத்தீவில் தமிழர்களின் உரிமைகள் குறித்து வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, விவகாரம் துாதரக உறவு ரீதியானது என்பதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், மீனவர்களின் பாதுகாப்பும் வாழ்வாதாரமும் எந்தச் சூழலிலும் பாதிக்கப்படக் கூடாது என வலியுறுத்தி, வழக்கை அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு ஒத்திவைத்தது.