வாஷிங்டன்: அமெரிக்காவில் சமீபமாக உயர்ந்து வரும் எரிபொருள் விலைகளுக்கு உக்ரைனே காரணம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றஞ்சாட்டினார். ஈரான் தொடர்பான போர் இதற்குக் காரணமல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

தன் சமூக வலைதள பதிவில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் விநியோகம் தற்போது சீரடைந்து வருவதாக டிரம்ப் கூறினார். தினமும் அதிக அளவில் கச்சா எண்ணெய் அந்த வழியாக அனுப்பப்படுவதால், விநியோகத் தடைகள் குறைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனால் எரிபொருள் விலை உயர்வுக்கு அந்தப் பகுதி நிலவரம் காரணமல்ல என வாதிட்ட டிரம்ப், ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து உக்ரைன் நடத்தும் தாக்குதல்களே விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என்றார். மேலும் உள்நாட்டு அரசியல் காரணங்களும் தாக்கம் செலுத்தியுள்ளதாகவும் கூறினார்.

எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி ஆளும் மாகாணங்களில் சில எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டதும் விலை உயர்வுக்கு ஒரு காரணம் என அவர் தெரிவித்தார். அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல் நெருங்கும் சூழலில், பல பிரச்னைகளுக்கு எதிர்க்கட்சிகளையும் பிற நாடுகளையும் டிரம்ப் குற்றம் சாட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.