ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவதை “உறுதியாக ஆதரிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். மதுவுக்கு அடிமைதனம் சமூகத்தில் கடுமையான பாதிப்புகளை உருவாக்குகிறது என்றும் அவர் கூறினார்.
தென்காசி மாவட்டம் சிவகிரியில் கோயில் கொடைவிழா நிகழ்ச்சியில் நடந்ததாக கூறப்படும் ஒரு சம்பவத்தை அவர் குறிப்பிட்டார். பொதுமக்கள் முன்னிலையில் கணவர் தாக்கியதால் மனவேதனை அடைந்த பெண், தனது இரு குழந்தைகளின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாகவும், பின்னர் தானும் தீக்குளித்து உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், காலை நடைப்பயிற்சியின் போது மதுவுக்கு அடிமையான கணவரால் இதேபோன்ற துயரத்தை எதிர்கொள்ளும் ஒரு பெண்ணையும் அவரது இரு குழந்தைகளையும் சந்தித்ததாக அவர் கூறினார். கிராமப்புறங்களில் கொலை, தற்கொலை மற்றும் சமூக மோதல்களுக்கு மதுவே முக்கிய காரணமாக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
மது இளைஞர்களின் வாழ்க்கையைச் சீரழிக்கிறது; மதுவுக்கு அடிமையான ஆண்கள் குடும்பங்களை அழிவின் பாதைக்கு தள்ளுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மதுவிலக்கை செயல்படுத்த முடியும் என கூறிய அவர், பாதிக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக இது செய்ய வேண்டிய கடமை என்றும் குறிப்பிட்டார்.





