சிவகாசியில் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட தமிழக சுகாதாரத் துறையின் துணை இயக்குநர் ஜெகவீரபாண்டியனின் சின்னாளப்பட்டி வீட்டில் விஜிலென்ஸ் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

ஒப்பந்தத் தொகையை விடுவிப்பதற்காக ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக வந்த புகாரின் அடிப்படையில், விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் ரூபா கீதாராணி தலைமையிலான குழு அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டது. இந்த சோதனை அதிகாலை 1 மணி வரை நீடித்ததாக கூறப்படுகிறது.

சோதனையில், அவரது மகள் பெயரில் ரூ.1.50 கோடி மதிப்பில் தங்க நகைகள் வாங்கியதற்கான ஆவணங்கள் மற்றும் ரசீதுகள் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர். கல்லூரி மாணவியான மகள் எந்தப் பணிக்கும் செல்லாத நிலையில் இவ்வளவு மதிப்பிலான நகைகள் வாங்கப்பட்டதைக் குறித்து விசாரணை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

2019 முதல் 2026 வரை வாங்கப்பட்ட நகைகள் தொடர்பான ரசீதுகளுக்குரிய நகைகள் அனைத்தும் வங்கி லாக்கரில் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்ததை அடுத்து, ரசீதுகளையும் வங்கி லாக்கரின் சாவியையும் போலீசார் பறிமுதல் செய்து மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்.