புதுடில்லி: டில்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது காங்கிரஸ் எம்பிக்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வாத்ரா பெண் போலீசாரிடம் எல்லை மீறி நடந்துகொண்டதாக கூறி பாஜ வியாழக்கிழமை ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.

தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, ஜந்தர் மந்தரில் ராகுல், பிரியங்கா உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி போராட்டம் நடந்ததாக கூறி, போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ராகுல் மற்றும் பிரியங்கா மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசாரை தாக்கியது மற்றும் அரசு அதிகாரிகள் பணியாற்றுவதைத் தடுத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

பாஜ வெளியிட்ட வீடியோவில், பிரியங்கா ஒரு பெண் போலீசை முழங்கையால் தாக்குவது போலவும், ராகுல் ஒரு பெண் போலீசின் முதுகைப் பிடித்து தள்ளுவது போலவும் காட்சிகள் இருப்பதாக பாஜ கூறியுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு, போராட்டத்தின் போது வன்முறை மற்றும் அராஜகத்தில் ஈடுபட்டதாக பாஜ தனது பதிவில் குற்றம்சாட்டியுள்ளது.