புதுடில்லி: இந்தியாவில் ஸ்டார்லிங் இணைய சேவையை அறிமுகம் செய்வதை சில செல்வந்தர்கள் தடுக்கிறார்கள் என்ற ஸ்டார்லிங் நிறுவனர் எலான் மஸ்க் குற்றச்சாட்டை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம், செயற்கைக்கோள் இணைய சேவைகள் (சேட்காம்) தொடர்பான ஒழுங்குமுறை நடைமுறை பாரபட்சமின்றியும் நியாயமான முறையிலும் செயல்படுத்தப்படுவதாக விளக்கம் அளித்தது.
மேலும், ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஸ்டார்லிங் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கும் செயற்கைக்கோள் இணைய சேவைக்கான தொலைத்தொடர்பு உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்தது.
பயனாளிகள் பாதுகாப்பும் அவர்களின் தரவு பாதுகாப்பும் உறுதி செய்யும் வகையில் மதிப்பீட்டு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், உரிமம் பெற்ற மூன்று நிறுவனங்களுக்கும் தரவு பாதுகாப்பு மதிப்பீடு ஒரே நிலையில் இருப்பதாகவும் கூறியது. பாதுகாப்புச் சோதனை செயல்முறை முடிந்த பின்னரே அலைக்கற்றை ஒதுக்கீட்டை கோர முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





