திமுக முன்னாள் அமைச்சர் வேலு மற்றும் அவரது மகன் குமரன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் (DVAC) பதிவு செய்த வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
திருவண்ணாமலையில் 2025 டிசம்பர் 14 அன்று நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டுக்கான திடலை சமன்படுத்த, மலப்பம்பாடி ஏரியில் இருந்து 10 முதல் 23 அடி ஆழம் வரை மணல் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அரசுக்கு சுமார் ரூ.8 கோடி இழப்பு ஏற்பட்டதாக அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தது.
அந்த புகாரின் அடிப்படையில் வேலு மற்றும் குமரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை ரத்து செய்யக் கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். மணல் எடுப்பு உரிய அனுமதியுடன் நடந்ததாகவும், வழக்கு கற்பனையாக பதிவு செய்யப்பட்டதாகவும் அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
மேலும், கவர்னரின் அனுமதி பெறாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி விசாரணைக்கு தடை கோரப்பட்டது. ஆனால், எதிர்தரப்பு பதிலை கேட்காமல் இடைக்கால தடை வழங்க முடியாது என நீதிபதி லட்சுமிநாராயணன் தெரிவித்தார்.
காவல்துறை தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரியதை ஏற்று, வழக்கு விசாரணையை நவம்பர் 6க்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.





